
சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்த விசேட திட்டம்!
நாடு முழுவதிலும் 379 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்குவதாகவும், இவற்றில் 47 நிலையங்கள் அரசாங்கத்திற்குரியது என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
ஏனைய அனைத்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் அரசுசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் அனுசரணையுடன் பராமரிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதிலும் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் திறன்களை மேம்படுத்தவும் அவற்றின் பௌதீக வள, மனிதவள மேம்பாட்டிற்கும் இந்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த 21 ஆம் திகதி அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் கூடியபோதே இந்தத் தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள், திணைக்களத்தின் ஊடாக பல்வேறு வழிகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகளைக் கருத்தில் கொள்ளும்போது ஒரு சிறுவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருந்தபோதும் இந்த நிதி அந்தச் சிறுவர்களுக்கு உரிய முறையில் சென்றடைகின்றதா என்பதைக் கணக்காய்வு செய்வதற்கு முறையான கட்டமைப்பு எதுவும் இல்லையென்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
நன்னடைத்தை அதிகாரிகளின் சுற்றிவளைப்புக்களில் சில சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இதுவரை மூடப்பட்டிருப்பதாகவும், அந்தச் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்கான நடைமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதிலளித்தார்.