பாணந்துறையில் அதிரடி சோதனை: போதையில் வாகனம் செலுத்திய 3 சாரதிகள் சிக்கினர்!
பாணந்துறை பேருந்து நிலையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, கஞ்சா உட்கொண்டிருந்த மூன்று பேருந்து சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது போக்குவரத்து வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர அவர்களின் கூற்றுப்படி, இன்று ஒரே நாளில் 88 பேருந்து சாரதிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களில் மூன்று சாரதிகள் கஞ்சா (Cannabis) உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
போதைப்பொருள் பயன்படுத்திய சாரதிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் செலுத்தி வந்த பேருந்துகள் காவல்துறையினாின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
பொது போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளைக் கண்காணிப்பதற்காக, காவல்துறையினா் தற்போது நடமாடும் ஆய்வகங்களை (Mobile Laboratories) பயன்படுத்தி நாடு முழுவதும் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த அதிரடி சோதனையானது வீதி விபத்துகளைக் குறைப்பதற்கும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் ஒரு தொடர் நடவடிக்கையாகும்.

