ஹர்ஷ அபேவிக்ரம பதவி நீக்கம் – அமைச்சு விளக்கம்..!
விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷா அபேவிக்ரம பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய பாணகல உபதிஸ்ஸ தேரர், விமான நிலைய முனையத்திற்குள் (Terminal) நுழைவதற்காகப் பெற்றிருந்த விசேட அனுமதிப்பத்திரத்தை நீடிக்குமாறு கோரி சமர்ப்பித்த கடிதமே முன்னாள் தலைவரின் நீக்கத்திற்குக் காரணம் என சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025.12.29 ஆம் திகதியன்று இலங்கை மகாபோதி சங்கத்தின் கடிதத் தலைப்பில் வணக்கத்திற்குரிய பாணகல உபதிஸ்ஸ தேரர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
அதில், கடந்த காலங்களில் தமக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அனுமதிப்பத்திரம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதால், அதனை அடுத்த வருடத்திற்கு நீடிக்குமாறு கோரியிருந்தார்.
தேரரின் சர்வதேச சமயப் பணிகளைக் கருத்திற்கொண்டு, அதனை அடுத்த வருடத்திற்கு நீடிக்குமாறு அந்தக் கடிதத்திலேயே குறிப்பொன்றை இட்ட அமைச்சர், மேலதிக நடவடிக்கைகளுக்காக அதனை முன்னாள் தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
விசேட அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பாக முன்னர் ஏற்பட்ட சில அனுபவங்களை முன்னாள் தலைவர் அமைச்சருக்குத் தெளிவுபடுத்தியிருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர், தகுந்த நிபந்தனைகளுடன் அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பணிப்புரை விடுத்தார்.
அதற்கமைய, கடந்த 9 ஆம் திகதியன்று பாணகல உபதிஸ்ஸ தேரருக்கு முன்னாள் தலைவரால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தேரரின் கோரிக்கைக்கு அமைய இந்தக் கடிதம் ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்பட்டதுடன், இது தொடர்பாக அமைச்சருக்கும் முன்னாள் தலைவர் ஹர்ஷா அபேவிக்ரமவுக்கும் இடையே எவ்வித கருத்து முரண்பாடுகளும் ஏற்படவில்லை என அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் சில காரணங்களுக்காகத் தலைவர் பதவி குறித்து தீர்மானம் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.
இதன்பொருட்டு, கடந்த 21 ஆம் திகதி அமைச்சருக்கும் ஹர்ஷா அபேவிக்ரமவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதற்கமையவே அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, பாணகல உபதிஸ்ஸ தேரருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் முன்னாள் தலைவரின் பதவி நீக்கத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என அந்த அறிவிப்பில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

