பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் – மற்றுமொருவர் வைத்தியசாலையில்!
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் நீடித்துவரும் நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் உடல்நிலை மோசமடைந்ததால் இன்று காலை அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தற்போது மிகத் தீவிரமான நிலையை எட்டியுள்ளது.
கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களை, எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் (Teacher Service) உள்வாங்குமாறு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 26 ஆம் திகதி சத்தியாக்கிரகமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம், அதிகாரிகளிடம் இருந்து உரிய தீர்வு கிடைக்காததால் அன்றே ‘சாகும் வரையிலான உண்ணாவிரதமாக’ மாற்றப்பட்டது.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நால்வரில் ஏற்கனவே ஒரு பெண்ணும் மற்றும் ஒரு ஆணும் உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எஞ்சியிருந்த இருவரில் ஒருவரின் உடல்நிலை இன்று (ஜனவரி 30) காலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் எஞ்சியுள்ள ஒரே ஒரு உத்தியோகத்தர் மாத்திரம் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். நீண்டகாலமாக இழுபறியிலுள்ள இந்த விவகாரத்திற்கு அரசாங்கம் விரைவில் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

