
சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் – பிரதிப் பொலிஸ் மா அதிபர்!
குற்றங்களுக்கான அரசியல் பாதுகாப்பு இன்று இழக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் பாதுகாப்பை இழந்த குற்றவியல் கும்பல்கள் வெளிநாடுகளில் இருந்தும் இந்த நாட்டில் குற்றங்களை நடத்தி வருவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்,
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட 58 குற்றவியல் குழுக்கள் மற்றும் அவற்றுக்கு ஆதரவளித்த 1400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முப்படைகளில் பணியாற்றும் அல்லது சேவையை விட்டு வெளியேறிய நபர்களின் ஆதரவும் பெறப்படுகிறது.
அத்தகைய நபர்களைக் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்களில் முப்படைகளைச் சேர்ந்த 9 பேர் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு நடந்த 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து விசாரணைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரான விசாரணைகளின் போது, 13 T56 ரக துப்பாக்கிகள், 15 ரிவால்வர்கள், 21 கைத்துப்பாக்கிகள், 75, 12-போர் ரக துப்பாக்கிகள், 7 ரிப்பீட்டர்கள், 805 ஷாட்கன்கள் மற்றும் 4 பிற துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நோக்கத்திற்காக சர்வதேச ஆதரவு தாராளமாகப் பெறப்படுவதாகவும், அதன்படி, வெளிநாட்டில் தங்கியிருந்த 19 குற்றவாளிகள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர முடிந்ததாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு பொதுமக்களின் உதவி தேவை என்றும், அத்தகைய தகவல்களை வழங்கும் பொதுமக்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படும் என்றார்.