கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரி ஆசீர்வாத விழாவிற்கு தடை! சிவ சேனை அறிக்கை

கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் 27 ஆம் 28 ஆம் ஆகிய இரு நாள்களும் மதம் மாற்றவும் மதம் பரப்பவும் பிசாசு, பில்லி சூனியம், தீராத நோய் தொடர்பாக மக்களை ஏமாற்றவும் நடத்த விருந்த செபம் மற்றும் ஆசீர்வாத விழாவிற்கு யாழ்ப்பாணம் காவல்துறை தடைவிதித்துள்ளதாக சிவ சேனை இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகத்தாருக்கு
புரட்டாதி 5, சனிக்கிழமை (24.09.2022)

சிவ சேனைச் சிவதொண்டர் சிறீந்திரன்
சிவ சேனைச் சிவதொண்டர் செயமாறன்
இருவருமாக வழங்கும் செய்தி அறிக்கை.

கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் 27 28 ஆகிய இரு நாள்களும் மதம் மாற்றவும் மதம் பரப்பவும் பிசாசு, பில்லி சூனியம், தீராத நோய் தொடர்பாக மக்களை ஏமாற்றவும் நடத்த விருந்த செபம் மற்றும் ஆசீர்வாத விழாவிற்கு யாழ்ப்பாணம் காவல்துறை தடை.

யாழ்ப்பாணம் காவல் நிலைய பொறுப்பாளருக்கும் (ASP, HQI)யாழ்ப்பாண மாவட்ட உச்ச ஆட்சி அலுவலருக்கும் (DIG) நன்றியையும் கடப்பாட்டையும் சைவத் தமிழர் சார்பில் சிவ சேனை தெரிவித்துக் கொள்கிறது.

1. அமெரிக்காவில் இருந்து வந்து மதம் பரப்பிச் சைவ சமயத்தைச் சீரழித்து, இன ஒழிப்புச் செய்ய முயல்கின்ற அமெரிக்கரான அலெக்ஸ் என்பவரின் கடவுச்சீட்டு விவரங்களைத் திரட்டுவது. சுற்றுலா நுழைவு உரிமத்துடன் வந்து புறம்பான மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாரா? என்பதை கண்காணிப்பது.  புலனாய்வாளரை அனுப்பி அவர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிப்பது. காவல்துறையினர் சிவ சேனையிடம் உறுதியளித்துள்ளனர்.

2. அரச வளாகமான கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் மதமாற்றும், மதம் பரப்பும் பிரசாரக் கூட்டத்தை நடத்த முடியாது எனக் காவல்துறையினர் கல்வாரி பூரண சுவிசேச சபையாருக்கு ஆணையிட்டுள்ளனர்.

3. சைவர்கள் விழாவாக்கும் நவராத்திரி காலமான 26 9 2022 தொடக்கம் 5 10 2022 வரையான பத்து நாள்களுக்கும் செபச் செய்தி கூட்டங்களைப் பொது இடத்தில் நடத்தக்கூடாது எனக் காவல்துறையினர் கல்வாரி பூரண சுவிசேச சபையாருக்கு ஆணையிட்டுள்ளனர். பொது இடங்களில் நடத்தாமல் கிறித்தவ தேவாலயங்களுக்குள்ளே நடத்துவதைத் தாம் தடுக்கவில்லை எனக் காவல்துறையினர் அச் சபையாரிடம் கூறியுள்ளனர்.

4. மதம் மாற்றம் மற்றும் மதம் பரப்பும் சுவரொட்டிகளைச் சைவத் திருக்கோயில் சுவர்களிலும் வளாகங்களுக்கு அருகிலும் ஒட்டியமைக்குக் கல்வாரி பூரண சுவிசேச சபையார் சைவர்களிடம் சிவ சேனை வழியாக மன்னிப்பு கேட்டனர். அவ்வாறு ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அனைத்தையும் தங்களுடைய ஆள்களை விட்டு உடனடியாக அகற்றுவதாகக் காவல் துறைக்கு உறுதி அளித்துள்ளனர்.

5. பொது இடங்களில் மதம் மாற்றும், மதம் பரப்பும், நோய்களை மாற்றுவதாக கூறி மக்களை ஏமாற்றும் செபக் கூட்டங்களையோ ஆசீர்வாதக் கூட்டங்களையோ எந்தச் சபையாரும் இலங்கையில் எங்கும் நடத்த விடோம் எனச் சிவ சேனை அமைப்பினர் கல்வாரி பூரண சுவிசேச சபையாரிடமும் காவல்துறையிடமும் தெரிவித்தனர்.

6. மதக்கலவரங்களை தூண்டும் இந் நிகழ்ச்சிகளை பொது இடங்களில் நடத்தினால் போராட்டங்களுக்கும் மதக் கலவரங்களுக்கும் மதம் பரப்பும் சபைகளே பொறுப்பாவர் எனக் காவல்துறையிடம் சிவ சேனையினர் கூறினர்.

Recommended For You

About the Author: webeditor