மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பால் தாக்கரே கோரேவாடா விலங்குகள் பூங்காவில் H5N1 வைரஸால் ஏற்படும் ஏவியன் ஃப்ளூ எனப்படும் பறவை காய்ச்சல் காரணமாக 3 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளன.
இது குறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசின் விலங்குகள் நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் கோரியுள்ளது.
மேலும், மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்கள், விலங்குகள் மீட்பு மையங்கள் போன்றவற்றில் இந்த காய்ச்சலை தடுப்பது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாத இறுதியில், இந்த புலிகள் மற்றும் சிறுத்தையின் உடல்நிலை மோசமடைந்தது. அதன் பிறகு, அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் திடீரென அவற்றின் உடல்நிலை மோசமடைந்து அவை உயிரிழந்தன.
இதன் பிறகு, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அந்த விலங்குகளுக்கு H5N1 வைரஸ் தொற்று அல்லது ஏவியன் ஃப்ளூ இருப்பதாக கண்டறியப்பட்டது.
இது பறவைக் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த H5N1 வைரஸால் வரும் காய்ச்சல், கோழிகள் மற்றும் பிற பறவைகளைக்கூட பாதிக்கக்கூடும்.
இந்த விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரி ஷாலிகிராம் பகவத் தெரிவிக்கையில்; பால் தாக்கரே கோரேவாடா விலங்குகள் பூங்காவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 3 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளன என்று அவர் உறுதிப்படுத்தினார்.
”இந்தியாவில் புலிகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை”, என்று வனத்துறை அதிகாரி ஷாலிகிராம் பகவத் கூறுகிறார்.