இந்திய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்..!
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, தனது விஜயத்தை நிறைவு செய்து இன்று (09) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த விஜயத்தின் போது, ஜெனரல் திவேதி இலங்கையின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் பயிற்சி, தொழில்முறை இராணுவக் கல்வி மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தினார்.
இதன்போது இந்திய இராணுவத் தளபதி, இலங்கை இராணுவத்தின் முக்கிய நிறுவனங்கள் சிலவற்றிற்கு விஜயம் செய்ததுடன், இலங்கை இராணுவத்திற்கு 20 நவீன கெப் ரக வாகனங்கள், நான்கு நோயாளர் காவு வண்டிகள் மற்றும் சில பயிற்சி உருவகப்படுத்திகளை நன்கொடையாக வழங்கினார்.
அத்துடன், புத்தல இலங்கை இராணுவ போர் கல்லூரியின் பயன்பாட்டிற்காக இந்திய உதவியின் கீழ் முழுமையான விளையாட்டு வளாகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் இதன்போது நட்டி வைக்கப்பட்டது.
இது இந்திய – இலங்கை இராணுவ நட்புறவின் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்ததுடன், இலங்கை இராணுவத் தளபதி மற்றும் இந்திய இராணுவத் தளபதி ஆகியோருக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவும் பதிவாகியுள்ளது.

