ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி : கேரள பெண் பக்தரை முட்டிய மாடு!
உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்த கேரளப் பெண், மாடு முட்டியதில் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சீசா (62) என்பவர் தனது குடும்பத்தினருடன் இன்று (ஜனவரி 22, 2026) ராமேஸ்வரம் வந்துள்ளார்.
இன்று காலை தெற்கு கோபுர வாசல் வழியாகக் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது, சாலையில் வேகமாக ஓடி வந்த மாடு ஒன்று எதிர்பாராத விதமாக சீசா மீது பலமாக மோதியது.
மாடு முட்டிய வேகத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பெண்னை மாடு முட்டும் காட்சிகள் அங்கிருந்த ஒரு கடையின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் போன்ற மக்கள் நெருக்கடி மிகுந்த திருத்தலங்களில் மாடுகள் மற்றும் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

