2023 இ.போ.சவுக்கு 500 பஸ்கள் கொள்வனவு செய்ததில் அரசுக்கு 3,010 மில்லியன் ரூபா நட்டம் : கணக்காய்வு அலுவலக அறிக்கையில் தகவல்
இலங்கை போக்குவரத்து சபைக்கு 2023 ஆம் ஆண்டு 500 பஸ்வண்டிகளை கொள்வனவு செய்ததில் பஸ் ஒன்றுக்கு 6.02 மில்லியன் ரூபா செலுத்தியதால் மதிப்பிடப்பட்ட விலையை விட 3,010 மில்லியன் ரூபாவை அதிகமாக செலுத்தியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கடன் விதிமுறைகள் உடன்படிக்கையின் கீழ், இலங்கை அரசாங்கம் பெற்ற கடன் தொகையில் எஞ்சிய 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி 500 புதிய பஸ்களை போக்குவரத்துச் சபைக்கு இணைக்கும் தீர்மானம் அறிவியல் அடிப்படையில் அல்லாமல் அமைச்சரின் வாய்மொழி அறிவுறுத்தலின் அடிப்படையில் மாற்றப்பட்டதால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 15 வருடங்களுக்கு மேல் பழைமையான பஸ்களை அகற்றி, சபையினால் பராமரிக்கப்படும் மாநகர சேவைகளை இடையூறின்றி பராமரிக்கும் நோக்கில், 50-54 (2×2) ஆசனங்களைக் கொண்ட 400 புதிய பஸ் வண்டிகள் மற்றும் 32-35 (2×2) உயரமான இருக்கைகள் கொண்ட 100 பஸ் வண்டிகள் என்ற அடிப்படையில் 500 பஸ் வண்டிகளை கொள்வனவு செய்ய அமைச்சர்கள் குழுவால் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 23 திகதி வழங்கப்பட்ட கொள்கை முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்படி, உரிய கொள்முதல் ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் தயாரிக்கப்பட்டு, ஏலம் கோருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2020 ஜனவரி 01 திகதியன்று, அப்போதைய போக்குவரத்து அமைச்சர் மேற்கண்ட அமைச்சரவையின் முடிவை எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லாமல் வாய்மொழி ஆலோசனையின் பேரில் 500 புதிய 3,2-36 இருக்கைகள் கொண்ட மினிபஸ் வண்டிகள் மற்றும் 4,2-45 உயரமான இருக்கைகள் கொண்ட 100 புதிய பஸ் வண்டிகள் என 600 பஸ் வண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 திகதியன்று வழங்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, அசோக் லேலண்ட் லிமிடெட் இந்தியாவிலிருந்து 32 இருக்கைகள் கொண்ட 500 புதிய Ashoke Layland Kynx புதிய பஸ்வண்டிகளை ஒரு பஸ்வண்டி 26,662.50 USD என்ற விலையில் 13,311,250. அமெரிக்க டொலர்களுக்கு Ashoke Layland Limited India விடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. இந்தப் பஸ்களுக்காக செலுத்தப்பட்ட மொத்தத் தொகை 5,551 மில்லியன் ரூபாவாகும். ஒரு பஸ் வண்டியின் பெறுமதி 11.02 மில்லியன் ரூபாவாகும். 32-35 இருக்கைகள் கொண்ட பஸ்ஸின் மதிப்பிடப்பட்ட விலை 05 மில்லியன் ரூபாவாகும். இவ்வாறு 32 இருக்கைகள் கொண்ட பஸ்வண்டிக்கு 6.02 மில்லியன் ரூபா வீதம் மதிப்பிடப்பட்ட விலையை விட 3,010 மில்லியன் ரூபா அதிகமாக செலுத்தப்பட்டுள்ளது.