கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்கு போட்டியாக இருப்பதை பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல். அதுவே மனிதர்களுக்கான காரணம் என்றால், பின்வருமாறு சொல்லப்படுகிறது. ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக்கொண்டுவர உதவும் ஒரு நடவடிக்கையாக கோபம் உருவாகிறது. எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது.
கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கோபத்தை குறைப்பதற்கு அடுத்து என்ன செய்யலாம் என அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கும் மூளையில் சில பகுதிகள் உள்ளன. மன அழுத்தம், விபத்து, மூளையில் ஏற்படும் நோய்கள், மது போன்றவை மூளையின் கோபத்தை கட்டுப்படுத்தும் பகுதியை பாதிக்கின்றன. அதனால் சிறு விஷயங்களுக்குக்கூட கட்டுப்படுத்த முடியாமல், ஏன் காரணமே இல்லாமல்கூட கடுங்கோபம் ஏற்படுகிறது. அதனால்தான் ‘ஆறுவது சினம்’ என அவ்வையார் கூறியுள்ளார்.
அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஏற்க தொடங்கினாலே பாதி கோபம் குறைந்துவிடும். இன்னொரு முக்கியமான விஷயம் கோபம் என்பது அனிச்சையாக நடைபெறும் ஒரு பழக்கம்.
சூடான பாத்திரத்தை தொட்டவுடன் கை அனிச்சையாக பின்செல்வதுபோல், ஒரு நிகழ்வு நடந்ததும் யோசிக்காமல் அனிச்சையாக கோபப்பட்டு பலரும் பழகி இருக்கிறோம். தினமும் காலை எழுந்ததும் ஓர் 5 நிமிடம் இன்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம், என்கிறார்கள் உளவியலாளர்கள்.