ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் அசர்பைஜான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்!
கஜகஸ்தானில் நடந்த பயங்கர விமான விபத்து தொடர்பான அசர்பைஜானின் முதற்கட்ட விசாரணையில், குறித்த விமானம் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டமை கண்டறியப்பட்டதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அசர்பைஜான் ஏர்லைன்ஸின் J2-8243 விமானம், புதன்கிழமை தெற்கு ரஷ்யாவில் உள்ள செச்சினியா பிராந்தியத்தின் தலைநகரான க்ரோஸ்னிக்கு செல்லும் போது கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த 38 பேர் உயிரிழந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர்.
இந்த பேரழிவு குறித்த தனது ஆய்வின் கண்டுபிடிப்புகளை அசர்பைஜான் இன்னும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
எனினும், விசாரணையை நன்கு அறிந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு ரஷ்ய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தான் விபத்துக்கு காரணம் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் வியாழனன்று தெரிவித்துள்ளன.
விமானம் ரஷ்ய நகரான க்ரோஸ்னியை (Grozny) அணுகும் போது மின்னணு போர்முறை அமைப்புகளால் விமானத்தின் தகவல் தொடர்புகள் முடங்கிய பின்னர், ரஷ்ய ஏவுகணையால் விமானம் தாக்கப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் ஒரு ஆதாரத்தை மேற்கொள்ளிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், விமானம் மீதான தாக்குதல் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் தெரிவிக்கவில்லை.
அதேநேரம், விமானிகள் அவசரமாக தரையிறங்குமாறு கோரியதையடுத்து, விமானம் ரஷ்யாவில் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அதற்கு பதிலாக காஸ்பியன் கடலின் குறுக்கே அக்டாவ் நோக்கி பறக்குமாறும் இயக்கப்பட்டதாக அரசாங்க ஆதாரங்களை யூரோநியூஸ் மேற்கோளிட்டுள்ளது.
இதனிடையே, பறவைகள் கூட்டத்தைத் தாக்கியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று ரஷ்யாவின் விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பகம் முதலில் கூறியது.
அண்மைய வாரங்களில் உக்ரேனிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் வடக்கு காகசஸின் ஒரு பகுதியின் மீது விமானம் பறந்து கொண்டிருந்தது.
மேலும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய் இரவு மற்றும் புதன்கிழமை காலை பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது.
சமூக ஊடகங்களில் தாக்கப்பட்ட விமானத்தின் காட்சிகள் விமானம் தரையில் மோதுவதற்கு முன்பு செங்குத்தான இறங்குவதைக் காட்டியது மற்றும் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது.
விபத்திற்கான காரணம் தொடர்பான ஊகங்களுக்கு எதிராக ரஷ்யா எச்சரித்துள்ளதுடன், விசாரணையின் முடிவுகளுக்கு முன் இவ்வாறான கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை வெளியிடுவது தவறானது என்று சுட்டிக்காட்டியது.
எவ்வாறெனினும், அசர்பைஜான் வியாழன் அன்று விபத்தில் பலியானவர்களுக்கு துக்க தினத்தை அனுசரித்தது.
முன்னாள் சோவியத் நாட்டில் வசிப்பவர்கள் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு, நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஒரு கணம் மௌன அஞ்சலி செலுத்தினர்.