அகஸ்த்திய மாமுனிவரின் ஜனன தினத்தையொட்டி மாபெரும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை (19) மூதூர் – கங்குவேலி பிரதேசத்தில் இடம்பெற்றது.
நிலாவெளி – கோபாலபுரம் சித்த ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலை மற்றும் கிழக்கு பல்கலைக் கழகம் இணைந்து நடாத்தியிருந்தது.
அகஸ்த்திய ஸ்தாபன சிவன் ஆலயத்தில் அமையப்பெற்ற அகஸ்த்திய முனிவருக்கான் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமான இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு காலை 9.00 மணியிலிருந்து மதியம் 2.30 மணிவரை இடம்பெற்றதுடன், உடல் பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, உடற்பருமன் அளவு போன்ற பல பரிசோதனைகளுடன் தொற்றாநோய் மற்றும் தொற்றும்நோய் தொடர்பான சித்த மருத்துவ ஆலோசனைகளுடன் மருந்துகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த மருத்துவ முகாமில் கோபாலபுரம் சித்த ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.நிரஞ்சன் உட்பட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவபீட மாணவர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.