வடக்கை மிரட்டும் காய்ச்சல்; நேற்றும் ஒருவர் பலி
யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஐந்து நாள் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் தாயாரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூரி வீதி, ஓடக்கரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் ரஞ்சிதா (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி காய்ச்சல் அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அவர் பனடோல் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.
காய்ச்சல் நிற்காததை அடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் சென்றுள்ளார். இதன்போது அவர் அங்கு மயங்கி வீழ்ந்துள்ளார்.
அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் அவரின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேற்படி பெண்ணின் சுவாசத் தொகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு உண்ணிக் காய்ச்சல் அல்லது எலிக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது.
எனினும், எவ்வாறான நோயால் அவர் உயிரிழந்தார் என்பது கொழும்பில் இருந்து பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்று சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.
இதேவேளை, திடீர் காய்ச்சல் மற்றும் சடுதியான நோய் நிலை காரணமாக 23 வயதான யுவதி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால், எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.
எனவே, பொதுமக்கள் தமது சுகாதாரம், குடிதண்ணீர் ஆரோக்கியம் என்பவற்றில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.