“நாளாந்த வாழ்வில், தினமும், உணவுக்காகாவும், உரிமைக்காகவும், சுரண்டப்படும் எமது வளங்களுக்காகவும், காணாமல் போன உறவுகளைத் தேடியும்,போராடிக் கொண்டே இருக்கிறோம். “ என சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) தலைவர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (10.12) செவ்வாய், காலை, உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னார் நகர்ப் பகுதியில் சுற்று வட்டத்திற்கு முன்பாக ஒரு கவனயீர்ப்பு ஊர்வலத்தை முன்னெடுத்த போதே அவர் இவ்வவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்களும் இந்நாட்டுப் பிரஜைகள் தான். எங்களுக்கும் சம உரிமை உள்ளது. ஆனால் நாங்கள் எல்லாவற்றிற்கும்
போராடுகிறோம். காலை கண்விழித்ததிலிருந்து உறங்கச் செல்லும் வரை எமது வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது.”
“எம்மை,அச்சுறுத்தும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், எங்கள் வளங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்களைப் போல இந்த அரசாங்கமும் எங்களை ஏமாற்றி விடக் கூடாது.”
“எனவே இந்த சர்வதேச மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக அமைப்புகளில் உள்ள இளம் தலைமுறையினரை இணைத்துக் கொண்டு, எங்களுக்கு நீதியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரி, இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் இளைஞர் யுவதிகள், மும்மொழிகளிலும். எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, பாண்ட் வாத்தியத்துடன், மன்னார் சுற்றுவட்டத்திலிருந்து , தாழ்வுபாடு வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று, மன்னார் தபாலகத்தின் வழியாக மீண்டும் சுற்றுவட்டத்தை வந்தடைந்தனர்.