தோனியுடன் பேசி 10 வருடமாகிவிட்டது – ஹர்பஜன் சிங்

தோனியுடன் பேசி 10 வருடமாகிவிட்டது – ஹர்பஜன் சிங்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். தனக்கு மரியாதை அளிப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை கொடுப்பேன் என்று கூறியுள்ள அவர், தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக தோனி 2007ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பின், அவரின் முக்கியமான ஸ்பின்னராக ஹர்பஜன் சிங் இருந்தார். 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஆகிய இரு வெற்றிகளிலும் ஹர்பஜன் சிங் முக்கியப் பங்கு வகித்தார். அதன்பின் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் எழுச்சி காரணமாக ஹர்பஜன் சிங் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

கடைசியாக 2016ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் ஹர்பஜன் சிங் இந்திய அணிக்காக தோனியின் கீழ் விளையாடினார். இதன்பின் சிஎஸ்கே அணியில் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் இணைந்து பணியாற்றினர். ஆனால் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் விலகிய பின், சிஎஸ்கே அணியுடனான உறவும் முடிவுக்கு வந்தது.

அதன்பின் தோனியை கடுமையாக விமர்சித்து வந்தவர்களில் ஹர்பஜன் சிங்கும் ஒருவர். இந்த நிலையில் சமீபத்தில் ஹர்பஜன் சிங்கிடம் தோனி உடனான நட்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது,

“.. நான் தோனியுடன் பேசுவதில்லை. நாங்கள் இருவரும் சிஎஸ்கே அணிக்காக இணைந்து விளையாடிய போது பேசி இருக்கிறேன். நாங்கள் இருவரும் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.

நான் பேசாததற்கு எந்த காரணமும் இல்லை. ஒருவேளை தோனிக்கு காரணங்கள் இருக்கலாம். எனக்கு அதுகுறித்து தெரியாது. சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது கூட களத்தில் மட்டுமே உரையாடிக் கொள்வோம். அதன்பின் எனது அறைக்கு அவரோ, அவரின் அறைக்கு நானோ சென்று பேசியதில்லை. அவருக்கு எதிராக சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை.

ஒருவேளை எனக்கு எதிராக அவருக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், நேரடியாகவே சொல்லலாம். தோனியிடம் பேசுவதற்காக ஒருமுறை கூட முயற்சித்ததில்லை. எனது அழைப்புகளுக்கு மதிப்பளித்து பேசுபவர்களிடம் மட்டுமே பேசுவேன். மற்றவர்களிடம் சென்று பேசுவதற்கு எனக்கு நேரமில்லை. நண்பர்களாக இருந்த அனைவரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன்.

நட்பு, உறவு என்று அனைத்துமே விட்டுக் கொடுத்து செல்வது தான். நான் உனக்கு மதிப்பளிக்கும் போது, நீயும் என்னை மதிக்க வேண்டும். நான் ஒரு முறை அல்லது இரு முறை செல்ஃபோனில் கால் செய்து பதில் வரவில்லை என்றால், பின்னர் நான் நினைக்கும் போது மட்டுமே சந்திப்பேன்..” என்று தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin