ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணத்தில் திருப்பம்
– நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமானின் குறுக்கு கேள்விக்கு அமைச்சர் நலிந்த பதில்
ரக்பி விளையாட்டு வீரர் தாஜுதீனின் மரணம் தொடர்பிலான தொலைபேசி கலந்துரையாடல் தரவுகள், புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பொலிஸ் அதிகாரி அனுர சேனாநாயக்க மற்றும் ஏனையவர்களின் தொலைபேசி உரையாடல்களை வெளியிட மறுத்த டயலொக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த குற்றச்சாட்டை அடுத்து, இந்த தகவலை நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார்.
முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி அனுர சேனாநாயக்க மற்றும் பலர் செய்த தொலைபேசி அழைப்புக்களின் தரவுகளை டயலொக் நிறுவனம் வழங்க மறுத்ததால், ரக்பி வீரர் தாஜுதீன் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும், அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான்ஸ் விஜேசூரிய, டிஜிட்டல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த போதே, அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, தாஜுதீனின் மரணம் தொடர்பில் தேவையான தகவல்கள் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தநிலையில், தாஜுதீனின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதுடன், அதற்கு காரணமானவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வாஸிம் தாஜூதீன் 2012ஆம் ஆண்டு மே 17ஆம் திகதியன்று சந்தேகத்துக்குரிய வாகன விபத்து ஒன்றில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.