அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை கண்டுபிடிக்க முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது, 100 சதவிகித வரியை (இறக்குமதி வரி) விதிக்கப் போவதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் சனிக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில், “டாலரை விட்டு விலகும் பிரிக்ஸ் நாடுகளின் முயற்சிகளுக்கு நாங்கள் மௌனம் காத்த காலம் முடிந்துவிட்டது,” என்றார்.
“இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது சக்தி வாய்ந்த அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறொரு நாணயத்தை முன்னிறுத்துவதையோ ஆதரிக்க மாட்டோம்.
அப்படி நடந்தால், 100 சதவிகித வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை முன்னிறுத்த முயற்சிக்க மாட்டோம் என்ற உறுதிமொழி எங்களுக்குத் தேவை.” என டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், “பிரிக்ஸ் நாடுகள் வேறு நாணயத்தை முன்னிறுத்தினால், அற்புதமான அமெரிக்கப் பொருளாதாரத்தில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் இருந்து விடைபெற வேண்டும். அவர்கள் வேறு நாட்டில் விற்பனை செய்து கொள்ளலாம்.
சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை மாற்றுவது பிரிக்ஸ் கூட்டமைப்பால் முடியாது. அவ்வாறு செய்யும் எந்த நாடும் அமெரிக்காவிடம் இருந்தும், அனைத்து வர்த்தகத்தில் இருந்தும் விடைபெற வேண்டும்” என்று அவர் பதிவிட்டார்.