மன் சிட்டியை வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறது லிவர்பூல்

இங்கிலாந்து பிரீமியர் லீக் உதைப்பந்தாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் மென்செட்டர் சிட்டி கழகத்தினை 2:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லிவர்பூல் கழகம் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறது.

உலகின் கழக மட்ட உதைப்பந்தாட்டத் தொடர்களில் மிக அதிகமான பணம் புரளும் தொடரான இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகளின் நடப்பு ஆண்டுக்கான 13வது வாரப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ள லிவர்பூல் கழகம் ஐந்தாம் நிலையிலிருக்கும் மன்செட்டர் சிட்டி கழகத்தினை அன்பீல்ட் மைதானத்தில் எதிர்த்து விளையாடியது.

விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் ஆரம்பித்த போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் லிவர்பூல் வீரர்களின் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதனால் போட்டியின் 12ஆவது நிமிடத்தில் முஹம்மது சலாஹ் கொடுத்த இலகு கோலுக்கான பந்துப் பறிமாற்றத்தை பெற்றுக் கொண்ட கொடி கம்போ கோலாக மாற்ற 1-0 என முன்னிலை பெற்றது லிவர்பூல்.

தொடர்ந்த போட்டியின் மேலதீக நிமிடங்களில் இரு அணிகளும் கோல் உட்செலுத்தாமல் போக முதல் பாதி 1-0 என லிவர்பூலின் முன்னிலையுடன் நிறைவுக்கு வந்தது.

பின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் மென்செட்டர் சிட்டி வீரர்கள் ஆட்டத்தில் சற்று வேகத்தினைக் காட்டினர். இருப்பினும் அவர்களால் லிவர்பூலின் தடுப்பு வீரர்களைக் கடந்து அவர்களால் கோல் கணக்கை ஆரம்பிக்க முடியவில்லை.

இருப்பினும் போட்டியின் 78வது நிமிடத்தில் வைத்து மன்செட்டர் சிட்டியின் தடுப்பு வீரரின் விதி மீறிய பந்துப் பறிப்பினால் லிவர்பூல் கழகத்திற்கு பெனால்ட்டி உதைக்கான வாய்ப்புக் கிடைத்தது.

இதனை பொறுப்பேற்ற முஹம்மது சலாஹ் பந்தை கம்பத்தினுள் அனுப்பி வைக்க கோல் கணக்கை இரட்டிப்பாக்கிய லிவர்பூல் கழகம் முன்னிலையை மேலும் உறுதிப்படுத்தியது.

தொடர்ந்த ஆட்டத்தின் மேலதீக நிமிடங்கள் கோல்கள் இன்றி முடிவுக்கு வர முழு நேர ஆட்டம் முடிவில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 13 போட்டிகளில் 11 வெற்றியுடன் 34 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் தொடர்ந்தும் நீடிக்கிறது.

Recommended For You

About the Author: admin