இந்த வெள்ள அனர்த்தத்தில் வன்னி மாவட்டங்களான, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதிலே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அரசாங்கத்திடம் கோரிக்கை. விடுத்துள்ளார்.
இன்றைய தினம் (02.12), திங்கள், மன்னாரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விவசாயிகள் அழிந்து போன தங்கள் விளைநிலங்கள் குறித்து மிகவும் ஒரு மன வேதனையுடன் இருக்கின்றார்கள். ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளுடைய கஷ்டங்களை உணர்ந்து உரையாற்றியிருந்தார். அந்த வகையிலே அவருடைய சிந்தனை செயல் வடிவம் பெறுவதாக இருந்தால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களது விவசாய நிலங்களிலே மீண்டும் அவர்கள் உற்பத்தியை செய்வதற்கு, அரசாங்கம் நிவாரணத்தை வழங்க வேண்டும். “
“அது மாத்திரமல்லாது, அரச உத்தியோகத்தர்கள் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் வெள்ள,நிவாரணங்கள் வழங்கப்பட்டு, வருகின்ற போதும் அரச உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அரச ஊழியர்கள் என்பதால் அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை,”
“அத்தோடு பத்திரிகையாளர்களும் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். அவர்கள் தேசத்தினுடைய நலனைக் கருத்தில் கொண்டு செயற்படுகிறவர்கள். எனவே இந்த நிவாரணங்கள் அவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.”
“எனவே நான், இதனை ஒரு கோரிக்கையாக ஜனாதிபதியிடமும் புதிய அரசாங்கத்திடமும் முன் வைக்கிறேன்” என்றார்.