அதானி விவகாரம்: காங்கிரஸ், பாஜக இடையே மோதல்

இந்திய கோடிஸ்வரர் கெளதம் அதானி மீதான நிதிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரை கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், இது ‘சோரோஸின் திரைக்கதை’ என்று பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தொழிலதிபர் அதானியின் பெயர் இடம்பெறவில்லை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ள நிலையில்,அதானி விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இடையே நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நேற்றைய தினம் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.

நாடாளுமன்றத்தின் பிற அலுவல்களை ஒத்துவைத்து , அதானி விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது,

அதானி மீதான குற்றச்சாட்டுக்களை அவர் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

அவர் கைது செய்யப்பட வேண்டும் .ஆயிரம் கோடிகள் மோசடிகளுக்காக அதானி அமெரிக்காவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். அரசு அவரைப் பாதுகாக்கிறது” என்றார்.

ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது

சோரோஸின் திரைக்கதை இந்தியாவில் அரங்கேறுகிறது என பாஜகவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸின் திரைக்கதையை இங்கு அரங்கேற்ற காங்கிரஸ் முயல்கிறது என்று அவர் குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இது காங்கிரஸின் குற்றச்சாட்டு இல்ல, இந்த வழக்கு சோரோஸின் நிதியுதவியால் அரங்கேற்றப்படுகிறது என்பதை அமெரிக்க நிர்வாகமும் அறிந்தே உள்ளது.

இந்தியாவை, நாட்டுக்கு வெளியே பொருளாதார ரீதியாக தாக்கும் ஒரு திரைக்கதையே இது. காங்கிரஸ் வேண்டுமென்றால் இதுதொடர்பாக வழக்கு தாக்கல் செய்யட்டும்.

அவர்களுக்கு சட்டப்பூர்வ வழிமுறை இருக்கிறது. அது தொடர்பாக விசாரணை நடைபெறும்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்த அமெரிக்க தொழிலதிபர் சோரோஸுடன் காங்கிரஸ் கட்சியை இணைத்து பாஜக பலமுறை குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin