குழப்பகரமான நிலைக்குள் சிக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்!
இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 5 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் ஊழல் அல்லது வேறு எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதோருக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வித குற்றங்களும் சாட்டப்படாத ஐந்து பேரையே நியமிக்குமாறு கட்சி முக்கியஸ்தர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்சி உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கட்சியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் ஆகியோருக்கு தேசியப் பட்டியலில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டும் என தேர்தலுக்கு முன்னர் பேசப்பட்டது.
இவ்விரு இடங்கள் தவிர, டலஸ் அழகப்பெரும, ஜீ. எல். பீரிஸ், சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே மற்றும் முன்னைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இது தவிர, உபுல் ஜயசூரிய, ரவி ஜயவர்தன, மஹிம மெண்டிஸ் போன்றவர்களுக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.
அத்துடன், இம்முறை கொழும்பு மாவட்டத்தில் 5ஆவது இடத்தில் இருந்த எரான் விக்ரமரத்ன, நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய குற்றமற்றவர் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டுக் கட்சிகளும் சில தேசியப்பட்டியல் இடங்களைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் கலந்துரையாடலின் பின்னர், தேசிய பட்டியல் பதவிகளுக்கு யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.