செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்வி பணியாளர்கள் சுமார் 30,000 பேருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை இதுவரையில் செலுத்தப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற கடந்த செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் சுமார் ஒன்றரை மாதங்கள் கடந்த போதிலும் வலயக் கல்வி அலுவலகம் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களின் தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வழங்காமையே இந்த சிக்கலுக்கான காரணம் என பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு குறுகிய நாட்களே காணப்படும் நிலையில், ஆசிரியர்கள் அந்த தேர்தல் கடமைகளுக்கு கலந்துக்கொள்வது தொடர்பில் நிச்சயமற்ற ஒரு நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கான பணம் கிடைக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதால் விரைவில் குறித்த பணத்தை பெற்றுக் கொடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் தொடர்பில் பேசுவதைப் போலவே தேர்தல் கடமைகளுக்கு கலந்துக் கொள்ளும் அரச அதிகாரிகளின் கொடுப்பனவு தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என பொதுச் செயலாளர் ஜோஷப் ஸ்டாலின் தெரிவித்தார்.