பாராளுமன்றத் தேர்தல் அண்மித்து வருகின்ற நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி அநுர – டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சர் பதவியொன்றை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா கூறி வருவதாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது கூறியதாக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டு வருகின்றது.
இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் முற்றிலும் பொய்யானது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாய கட்சி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதியாக அநுர குமார திஸநாயக்க பதவியேற்றதன் பின்னர், அவருக்கு வாழ்த்தினைக் கூறுவதற்காகவும், கடந்த மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின செயற்பாடுகள் தொடர்பிலான இலங்கை – இந்திய அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாகவும், டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக செயற்பட்டிருந்த காலகட்டத்தில் முன்னெடுத்திருந்த வேலைத்திட்டங்களைத் தொடர்வது மற்றும் ஆரம்பிப்பதற்கு தயார் நிலையில் இருந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது குறித்த 37 விடயங்கள் தொடர்பாகவும் தொலைபேசி மூலம் ஜனாதிபதியை தொடர்பு கொண்டிருந்தார்.
இத்தகைய நிலையில் நேரில் சந்தித்து மேற்படி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இருவரும் இணங்கிய நிலையில், ஜனாதிபதி நேரம் ஒதுக்கித் தந்திருந்ததன் பிரகாரம், கடந்த மாதம் 25ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிக்கும், டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
அந்த வகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தையே டக்ளஸ் தேவானந்தா பொதுவாகக் கூறினாரே தவிர, அமைச்சுப் பதவி குறித்து கலந்துரையாடப்பட்டதாகவோ, தனக்கு அமைச்சுப் பதவி தருவதாக ஜனாதிபதி இணங்கியதாகவோ, இணங்கவில்லையென்றோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.
டக்ளஸ் தேவானந்தாவின் சந்திப்புகள், கலந்துரையாடல்கள், வேலைத்திட்டங்கள் தொடர்பான அனைத்து செய்திகளும் பகிரங்கமாகவே அவரது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கங்களிலும், ஈ.பி.டி.பி. கட்சியின் இணையத்தளத்திலும் வெளியாகி வருகின்றன. அவற்றில், அமைச்சுப் பதவி தொடர்பிலான எந்தக் கருத்துகளையும் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டதாக செய்திகள் இடம்பெறவில்லை.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் பல ஊடக சந்திப்புகளில் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டுள்ள போதிலும், அவற்றின்போதுகூட அமைச்சுப் பதவி தொடர்பான கருத்துகள் எதனையும் அவர் கூறவில்லை. தவிர, இத்தகைய பொய்யான ஒரு தகவலை முன்வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டிய அவசியம் எதுவும் எமது கட்சிக்கு இல்லை.
இத்தகைய நிலையில், பிமல் ரத்நாயக்க வேண்டுமென்றோ அல்லது தவறான புரிந்துணர்வுடனோ இத்தகையதொரு கருத்தை முன்வைத்திருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.