சுன்னாகத்தில் ஒரு சாதாரண விபத்தில் தவறிழைத்தவர்களை விட்டுவிட்டு காட்டுமிராண்டித் தனமாக வானில் வந்த அப்பாவி மக்கள் மீது கோரத்தனமாகத் தாக்கிய பொலிஸாரும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் உடன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதுடன், அவர்களை உடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தண்ணியில்லா காட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
– இவ்வாறு மிகவும் காட்டத்துடன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்,. கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளரும் வலி. தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தி. பிரகாஷ்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –
மாற்றம், ஊழல் ஒழிப்பு என்று ஆட்சியைப் பிடித்த அநுர அரசு, தென்னிலங்கை பெரும்பான்மை மக்கள் மத்தியில் அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே அங்கு மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, வடக்கு – கிழக்குக்கு குற்றமிழைத்தவர்களை இடமாற்றம் செய்கின்ற பிரதேசமாக – சூனிய பிரதேசமாக – கருதுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
பனை அபிவிருத்திச் சபைக்கு ஊழல் பேர்வழியானவரைத் தலைவராக நியமித்தமையும் இதனையே காட்டுகின்றது.
இங்கு அநுர அரசுக்கு குடைபிடித்து அவரது தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளர்களாக உள்ளவர்களும் எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கண்டுகொள்வதாக – கண்டிப்பதாக – இவ்வாறான சம்பவங்களை சம்பந்தப்பட்ட அமைச்சு மட்டத்துக்கு எடுத்துச் செல்வதாகத் தெரியவில்லை.
தெற்கில் குற்றமிழைத்து, அங்குள்ள சிங்கள மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக வடக்குக்கு இந்தப் பொலிஸார் அனுப்பப்பட்டனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒருவர் தவறிழைக்கலாம். அது மன அழுத்தத்தால் ஏற்பட்டதென்று கூறலாம். அதில் தவறில்லை. ஆனால், ஒரு பொலிஸ் நிலையத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து அதனை தடுக்காமல் செயற்பட்ட விதத்தை நோக்கும்போது இவ்வாறே எண்ணத் தோன்றுகின்றது.
அந்த இடத்திலே காட்டுமிராண்டித் தனமாக 2 மாதக் குழந்தையைத் தூக்கி, பற்றைக்குள் பொலிஸார் எறிந்தனர் என்று தாயார் குறிப்பிடுவதில் இருந்து, அவர்கள் சிறிதளவும் மனிதநேயமற்று செயற்பட்டுள்ளார்கள் என்பதைத் துலாம்பரமாகக் காட்டுகின்றது.
ஆகவே, இந்த விடயத்தை மனித உரிமைகள் திணைக்களம் சம்பந்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, நீதி பெற்றுக்கொடுப்பதுடன், சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும், பதவிநிலையைக் குறைத்து, தண்ணியில்லாக் காட்டுக்கு உடன் இடமாற்றம் செய்ய வேண்டும் என பதில் பொலிஸ்மா அதிபரையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சையும் கேட்டுக்கொள்கிறேன் – என்றுள்ளது.