சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஷித அல்லது மாக்கந்துர மதுஷ் எனப்படுபவரின் மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால் விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு அவருடைய மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுஷின் மரணம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் ஒழுங்கான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவதாக அவருடைய மனைவி மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மாக்கந்துர மதுஷ் எனப்படுபவருடன் தொடர்பு வைத்திருந்த பல அரசியல்வாதிகளின் தகவல்களை அவர் வெளியிட தயாராக இருந்த சந்தர்ப்பத்தில் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாக விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் வெளியிடும் கருத்து ஹன்சார்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுஷ் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அதன்காரணமாக, இந்த மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸில் இருந்து விலக்கி, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் காவலில் இருந்த பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவரும் மற்றும் போதைப்பொருள் விநியோகஸ்தருமான மாக்கந்துர மதுஷ் எனப்படுபவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அழைத்துச் செல்வாதாக கூறி கொழும்பு மாளிகாவத்தை வீட்டுத் தொகுதிக்கு சென்ற சந்தர்ப்பத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்த போதிலும் மதுஷின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என அவரது மனைவி சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி தெரிவித்தார்.
நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாது என சுட்டிக்காட்டிய நீதவான் விசாரணையில் திருப்தியில்லை எனின் மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பரிசோதகரிடம் அறியப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்ய முடியும் என மேலதிக நீதவான் மேலும் சுட்டிக்காட்டினார்.