அரசியல் தீர்வே தேவை ; அமைச்சு பதவிகள் அல்ல

தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கிறார்கள். அமைச்சர் பதவிகளை அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்துள்ளார்
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் அமைச்சுப் பதவிகளை பெறுமாறு கேட்டதாக நாங்கள் அறியவில்லை.

நாங்களும் பல்வேறு இடங்களுக்கு தேர்தல் பரப்புரைகளுக்காக சென்ற போது, மக்கள் தமது அரசியல் தீர்வை பெறுவதற்கு தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்ற கருத்தையே அதிகம் முன் வைக்கிறார்கள்.

சுமந்திரனுக்கு தெற்கு கட்சிகளுடன் இணைந்து அமைச்சுப் பதவியை பெறுவதற்கு விருப்பமாக உள்ள நிலையில் அது தமிழ் மக்களுக்கு விருப்பம் எனக் கூறி மக்களின் தலையில் பாவத்தை போடப் பார்க்கிறார்.

சுமந்திரன் தமிழரசு கட்சிக்குள் என்ன செய்தார் என்பது பலருக்கு தெரியும். தானே முடிவை எடுத்துவிட்டு கட்சியின் மத்திய குழு முடிவு என பலதை தெரிவித்து இருக்கிறார். அதேபோன்று தான் அமைச்சு பதவிக்கு தான் ஆசைப்பட்டு விட்டு , தமிழ் மக்களின் விருப்பம் என சொல்லி இருக்கலாம்.

நான் தற்போது மான் சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணியில் பெண் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் எமது கட்சி மட்டுமே மாற்றத்தை உருவாக்கக்கூடிய வேட்பாளர்களை கொண்டுள்ளது.

மக்கள் மத்தியில் புதியவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டுமென்ற நிலைப்பாடு அனேகமானவர்களிடம் காணப்படும் நிலையில் எமது கட்சி மட்டுமே புதியவர்களை கொண்ட கட்சியாக காணப்படுகிறது என மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin