நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான நாள் நெருங்கி வருவதால் பிரதானக் கட்சிகளும், ஏனைய கட்சிகளும், சுயேச்சை குழுக்களும் இறுதிகட்ட பரப்புரைகளில் தீவிரமடைந்துள்ளன.
எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைய உள்ளதுடன், 12 மற்றும் 13ஆம் திகதிகளில் எந்தவொரு வேட்பாளரும், கட்சியும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியை அமைதிக் காலப்பகுதியாக கருதி அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரங்கள் சில மாவட்டங்களில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் பல மாவட்டங்களில் சுமூகமான நிலையில் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலை போன்று பொதுத் தேர்தலில் பிரச்சாரங்கள் தீவிரமாக இல்லையென பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதானக் கட்சிகள் தமது இறுதி பிரச்சாரக் கூட்டத்தை கொழும்பை மையப்படுத்தி நடத்த உள்ளன. மத்திய கொழும்மை மையப்படுத்தி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இறுதி பிரச்சாரக் கூட்டம் இடம்பெற உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளும் இறுதிக் கூட்டமும் மத்திய கொழும்மை மையப்படுத்தி இடம்பெற உள்ளதுடன், ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் இறுதி பிரச்சாரக் கூட்டம் கொழும்மை மையப்படுத்தி இடம்பெற உள்ளது. இம்முறை 17 மில்லியன் வாக்காளர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது