இலங்கையில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதியை கட்டுப்பாடுகள் விதித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியற்ற வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை நிறுத்தியிருந்த 2023ஆம் ஆண்டில் வரியற்ற வாகன அனுமதிப்பத்திர முறைமையில் 10 பேர் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை சுங்க திணைக்களம் நாடாளுமன்றில் முன்வைத்துள்ள 2023ஆம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரியற்ற விதத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய கடந்த நாடாளுமன்றத்தின் 10 உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
வரியற்ற வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்க அனுமதி வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்த நிலையில் அவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுக்கும் விதத்திலான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.
அந்த அறிக்கையின்படி, நிர்வாக சுற்றறிக்கைளின் கீழ் வெளியிடப்பட்ட 5,144 வாகன அனுமதிப்பத்திரங்கள், 194 சாதாரண வாகன அனுமதிப்பத்திரங்கள் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் ஒரு வாகனமும், மாகாண சபைகளின் கீழ் 1397 வாகன அனுமதிப்பத்திரங்களும் வரியற்ற விதத்தில் அவ்வாண்டில் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.