இலங்கையின் கடந்த அரசாங்கங்களில் பதவி வகித்த அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புடைய பிரபுக்கள் பயன்படுத்திய பதிவு செய்யப்படாத வாகனங்களை தேடுவதற்காக பொலிஸார், சுங்க திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பன இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளன.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் வைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
குறித்த வாகனங்கள் இணைக்கப்பட்டவையா அல்லது சுங்க வரிகளை செலுத்தாமல் பகுதிகளாக இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டவையா என்பதை ஆராய இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மற்றும் சுங்க அறிக்கைகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதன்போது, வாகன பாகங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பொருத்தும் தொழிலுக்கு காணப்படும் அரசியல் தொடர்புகள் பற்றியும் ஆராயப்படவுள்ளது.
அதன்படி, இவ்வாறான வாகனங்கள் நூற்றுக்கும் அதிகமானவை தற்போது வரையில் முன்னாள் பிரபுக்களிடம் காணப்படுவதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவற்றை மீள ஒப்படைக்காமல் அந்த வாகனங்களை மறைத்து வைப்பது மற்றும் ஒவ்வொரு இடங்களில் விட்டுச் செல்வதுமான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியிருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் அது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிடைக்கும் தகவல்களை அவதானத்தில் எடுப்பதாக கூறிய பொலிஸ் தலைமையகம் அது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரியுள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் மூலம் வெவ்வேறான இலக்கத் தகடுகளை பயன்படுத்தி பயன்படுத்தியுள்ள வாகனங்கள் தொடர்பில் முக்கியமான பல தகவல்கள் பொலிஸ் தலைமையகத்திடம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.