ஸ்ரீ லங்கா ரெலிகொம் புதிய தலைவராக கலாநிதி மோதிலால் டி சில்வா நியமனம்

ஸ்ரீ லங்கா ரெலிகொம் (SLT) நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி மோதிலால் டி சில்வா தெரிவு நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது நிர்வாக சபையின் ஒரு சுயாதீனமான, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகவும் தலைவராகவும் கலாநிதி மோதிலால் டி சில்வாவை நியமித்துள்ளதாக, ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் பல வருட அனுபவமுள்ள ஒரு நிபுணரான கலாநிதி மோதிலால் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்துள்ளார். இவர், பிரபல கையடக்கத் தொலைபேசி சேவை நிறுவனமான டயலொக் ஆசியாட்டாவிலும் மலேசியா ஆசியாட்டாவிலும் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

நிறுவனத்தின் நியமனங்கள் மற்றும் ஆளுகைக் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நஷ்டத்தைச் சந்தித்த பிஜி அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமான ரெலிகாம் பிஜி லிமிடெட் (Telecom Fiji Ltd) நிறுவனத்தின் வெற்றிகரமான மறுசீரமைப்புக்கு தலைமை தாங்கியமை தொடர்பில் கலாநிதி மோதிலால் டி சில்வா முக்கிய இடத்தை வகிக்கின்றார்.

குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அவர் பொறுப்பேற்றதன் பின்னர், நிறுவனம் இலாபம் பெறும் நிலைக்குத் திரும்பியதோடு, வலையமைப்பு நவீனமயமாக்கல், முதலீடுகளில் நிலையான வளர்ச்சியை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர், கலாநிதி டி சில்வா, Dialog Axiata இன் குழுமத் தலைமை மூலோபாய அதிகாரி மற்றும் குழுமத்தின் பிரதான நிறுவன

அதிகாரி மற்றும் MTN Networks Pvt Ltd இல் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவையின் பொது முகாமையாளர் உள்ளிட்ட பல முக்கிய தலைமைத்துவ பதவிகளை வகித்துள்ளார்.

அவரது அனுபவத்திற்கு மேலதிகமாக, உலகளாவிய அரங்கில் ஒரு செல்வாக்கு மிக்க நபராக இருந்து வருகிறார். சர்வதேச மன்றங்களில் 60 இற்கும் மேற்பட்ட விளக்கக்காட்சியுடனான விரிவுரைகளை வழங்கியுள்ள அவர், துபாயில் நடந்த BizTalk உலக மாநாட்டில் தொழில்நுட்பத்தில் சிறந்த 50 வணிக வளர்ச்சி தலைவர்களில் ஒருவராக கௌரவிக்கப்பட்டார்.

கலாநிதி மோதிலால் டி சில்வா, பரிஸில் உள்ள பிபிஏ பிசினஸ் ஸ்கூலில் வணிக நிர்வாகத்தில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்.

அந்த வகையில் SLT நிறுவனத்தை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவர் கொண்டு செல்வார் என எதிர்பார்ப்பதாக, SLT நிறுவனம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin