கல்வி மான்கள், புத்தி மான்கள் இள மான்களுக்கே வாக்களிப்பார்கள்

இந்த மண் மாற்றத்திற்கு தயாராகி விட்டது. கல்வி மான்கள் , புத்தி மான்கள் ஆகியோரின் தெரிவு இந்த இளமான்களே என யாழ் தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த மண்ணிலே இரண்டு தெரிவு தான் இருக்கிறது. ஒன்று ஏமாற்றம். மற்றதும் மாற்றம். ஏமாற்றத்திற்கு வாக்களிக்க விரும்பின் வாக்களிக்கலாம். மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் ஆயின் மானுக்கு வாக்களிக்க வேண்டும்.

எங்களை தவிர ஏனைய கட்சிகளில் 10 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் நிற்கின்றனர். அவர்களிடம் சென்று 10 வருடங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என கேட்டால் , மான்களை அடித்து துரத்துங்கள் என்றே கூறுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு சொல்ல எதுவும் இல்லை. இன்னும் 05 வருடங்கள் தாருங்கள் என கேட்டு நிற்பார்கள். அவர்களுக்கு தொடர்ந்து வாக்களிப்பது ஏமாற்றமே

இந்த மண் மாற்றத்திற்கு தயாராகி விட்டது என்பதை நடைபெற்று முடிந்த தபால் மூல வாக்களிப்பு ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்க எங்களுடைய ஆசனங்கள் தேவைப்பட்டால் , தமிழ் மக்கள் நலன் சார்ந்து எவ்வாறான முடிவினை எடுக்க வேண்டும் என்ற முடிவினை தமிழ் மக்களோடு கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான முடிவினை எடுப்போம். அந்த முடிவு மக்களின் உணர்வுகளை , உரிமைகளை எந்தவகையிலும் பாதிக்காத வகையில் இருக்கும்

13ஆம் திருத்தம் ஊடாக எதனையும் பெற முடியாது. சமஸ்டி பொறிமுறையை உருவாக்க வேண்டும். அதனை புதிய அரசியல் யாப்பு உருவாக்க பட வேண்டும். அதற்கான அழுத்தத்தை நாங்கள் கொடுப்போம்.

அவ்வாறான ஒரு யாப்பு வர முதல் தற்போதுள்ள யாப்பில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையே என மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin