களனி பல்கலைக்கழக மாணவனின் மரணம்: உள்காயங்களால் நிகழ்ந்துள்ளமை உறுதி

களனி பல்கலைக்கழகத்தில் கன்னங்கர மாணவர் விடுதியின் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இதில் குறித்த மாணவனின் மரணம் உள்காயங்களால் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவனின் உடலில் வெளிக்காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனவும் உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்ததால் மண்டை ஓடு, முதுகு தண்டு மற்றும் விலா எலும்புகளில் பலத்த சேதம் அடைந்து உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் மாணவனின் சடலம் அவரின் சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

களனி பல்கலைக்கழகத்தின் மாணவன் ஒருவர் கடந்த 23ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் கன்னங்கர மாணவர் விடுதியில் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பிரின்ஸ் ராஜூ பண்டார எனப்படும், பிபில, ரிதீமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் களனி பல்கலைக்கழகத்தில் நான்காவது ஆண்டில் கல்வி பயின்று வந்த மாணவன் ஒருவர் ஆவார்.

கடந்த 22ஆம் திகதி இரவு மாணவர்கள் சிலர் விடுதியினுள் களியாட்டம் ஒன்றை நடத்தியுள்ள நிலையில் உயிரிழந்த மாணவனும் அதில் இணைந்து நண்பர்களுடன் அன்றிரவு 12.30 மணியளவில் தனது அறைக்கு வந்துள்ளார்.

அதிகாலை 3 மணியளவில் இயற்கை அழைத்ததன் காரணமாக தனது அறையின் ஜன்னலின் மீது உட்கார முயற்சித்த சந்தர்ப்பத்தில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது,

மேல்மாடியில் இருந்து கீழே விழுந்ததால் மாணவனின் மூளையில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில் உடற்கூற்று பரிசோதனை வெளியாகி உள்காயங்களால் மரணம் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: admin