இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இலங்கை அதிகாரிகள் விரைவில் பயங்கரவாத அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இலங்கை அரசாங்கத்திற்கு அதன் ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் கருத்து வெளியிடுகையில், “இது மிகவும் தீவிரமான சூழ்நிலை, இதற்காக அதிகாரிகள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு முழு ஆதரவை வழங்குகிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறுகம்பே உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து, பிரித்தானியா தனது பயண ஆலோசனையை புதுப்பித்திருந்தது.
“இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. ஹோட்டல்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற வெளிநாட்டவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படலாம்” என்று பிரித்தானியாவின் ஆலோசனையில் கூறப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இலங்கையின் சுற்றுலாத் துறையில் உள்ள சிலர், தொழில்துறையை எதிர்மறையாக பாதிக்கும் வகையில் நிலைமை மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக பேட்ரிக் ஒப்புக்கொண்டார்.
பிரித்தானியா இலங்கையின் இரண்டாவது பெரிய சுற்றுலா மூல சந்தையாகும், இந்த ஆண்டின் ஒக்டோபர் 20 ஆம் திகதி வரை 143,007 பிரித்தானிய பிரஜைகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், அச்சுறுத்தல் தீர்க்கப்பட்டவுடன் ஆலோசனையை மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் புதுப்பிப்பு முழுமையாக நீக்கப்படுமா என்பது தெளிவாக இல்லை.
எவ்வாறாயினும், பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் செல்லும் பல நாடுகளில் இதே போன்ற எச்சரிக்கையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது