வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, கிளிநொச்சி – பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் யோசப் பிரான்சிஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச இணைப்பாளர் திருஞானதீபம் அன்ரனி அல்பட், மன்னார் – மாந்தை மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் அல்போன்ஸ் டேவிட், நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச உப தலைவர் பிலேந்திரன் அன்ரனி தவராசா, மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் ராஜா குருஸ், யாழ். வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர்.
“முல்லைத்தீவில் 4730 குடும்பங்களும், மன்னாரில் 15, 030 குடும்பங்களும், கிளிநொச்சியில் 4,120 குடும்பங்களும், யாழ்ப்பாணத்தில் 21, 800 குடும்பங்களும் கடற்றொழிலை தமது பிரதானமான வாழ்வாதாரமாக கொண்டிருக்கின்றனர். இந்த நான்கு மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளான நாம், எமது வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னைகளையும் அதில் எமது நிலைப்பாடுகள் மற்றும் அதற்கான தீர்வுகளை 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் முன்வைக்கின்றோம்.
1. இந்திய இழுவைமடிப் படகுகள் வட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் கடல் வளத்தையும் அழித்து செல்கின்றன. இலங்கை அரசாங்கம் இதற்கு கைது செய்தல், தண்டப்பணம் அறவிடல் மூலம் தொடர்ந்து இந்திய இழுவைமடிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எல்லை மீறும் இந்திய இழுவைமடி பிரச்னைக்கு நீண்ட கால தீர்வுகள் தேவை. இது சம்பந்தமான பேச்சுகள் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுடன் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு இணக்கத்தின்படி இடம்பெற வேண்டும். இவ்வாறான தீர்வுகளுக்கான ஆதரவை வழங்க வேண்டும்.
2. சட்ட ரீதியாக தடை செய்யப்பட தொழில்கள் மற்றும் முறைகளை நிறுத்த வேண்டும்.
(ஏ) – 2017ஆம் ஆண்டு 11ஆம் இலக்க சட்டத்தின்படி உள்ளூர் இழுவைமடிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அச்சட்டத்தை இறுக்கமாக அமுல்படுத்த வேண்டும்.
(பி) சுறுக்கு வலைகள், வெளிச்சம் போட்டு மீன்பிடித்தல், உழவு இயந்திரம் மூலம் கரை வலை இழுத்தல் போன்ற கடல் வளத்தை அழிக்கும் சட்டவிரோத தொழில்முறைகளை தடுக்க 1996ஆம் ஆண்டு 2ஆம் இலக்க சட்டத்தை இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்தி. அவற்றை முற்றாக தடை செய்ய வேண்டும்.
(சி) அனுமதியின்றி கடற்றொழிலில் ஈடுபடும் வெளி மாவட்ட கடற்றொழிலாளர்களை தடை செய்ய வேண்டும்.
3. கடற்றொழில் திணைக்களத்தால் நடத்தப்படும் கிராமிய கடற்றொழில் அமைப்புகள், கடற்றொழிலாளர்களை பிளவுபடுத்துவதுடன்
தசாப்தங்களாக இயங்கிவந்த கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களை வலுவிழக்கச் செய்துள்ளது. கிராமிய கடற்றொழில் அமைப்புகளை அரசு நீக்கி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த வேண்டும்.
4. அபிவிருத்தி என்ற போர்வையில் சிறு கடற்றொழிலாளர்களை பாதிக்கும் முறைமைகளை கட்டுப்படுத்த வேண்டும். அனுமதியற்ற கடலட்டை பண்ணைகளை ஆய்வுகள் ஊடாக மீள் ஒழுங்கமைக்க வேண்டும்.
மேலும், சூழலை மாசுபடுத்தும் இறால் பண்ணைகளை நீக்க வேண்டும். கரையோரத்தில் காற்றாலைகள் போடப்படுவதை மீளாய்வு செய்து கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவற்றை கொண்டு செல்ல வெண்டும். இடம்பெயர்ந்த கடற்றொழிலாளர்களை மீளக் குடியமர்த்துவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான கரையோர காணிகளை விடுவிக்க வேண்டும்.
5. கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த ஆய்வுகளும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். கடற்றொழில் சார்ந்து இடம்பெறும் ஆய்வுகள் மற்றும் அதன் வெளிப்பாடுகள், அந்தத் துறை சார்ந்த சங்கங்களுடன் இணைந்து நடத்தப்பட வேண்டும் என்பதுடன் அவை வெளிப்படைத்தன்மையானதாகவும் இருக்க வேண்டும்.
மீனவர்களுக்குத் தேவையான இறங்குதுறைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.