மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படுமா?

நிலக்கரி உரிய முறையில் கிடைக்காவிடின், தற்போதைய நாளாந்த மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு நிலக்கரி கிடைக்காவிடின், பாரிய பிரச்சினையை எதிர்நோக்க நேரிடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலக்கரி மோசடி குற்றச்சாட்டு

நிலக்கரி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிதிக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இது தொடர்பான கணக்காய்வு நடத்தப்பட்டு வருவதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

கணக்காய்வின் இறுதி அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு நிலக்கரி வழங்குவதற்கு விநியோகஸ்தர் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் கூறியுள்ளது.

டொலர் பற்றாக்குறை

தற்போதைய டொலர் பற்றாக்குறை, நிலக்கரி இறக்குமதிக்கு இடையூறாக இருப்பதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஆண்டிற்கான 2.25 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரிக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லக்விஜய நிலக்கரி ஆலையின் மூன்று இயந்திரங்களையும் இயக்குவதற்கு நாளாந்தம் 7500 மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது திருத்தப்படும் லக்விஜய நிலக்கரி ஆலையின் இரண்டாவது மின்பிறப்பாக்கியை தேசிய கட்டமைப்புடன் இணைப்பதற்கு மேலுமொரு மாத காலம் செல்லும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor