தழிழ் அரசியல்வாதிகள் எவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கவில்லை.தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கந்தசாமி இன்பராசா குற்றச்சாட்டு.
“நாங்கள் உருவாக்கிய,தமித்தேசியக் கூட்டமைப்பினரோ, வேறெந்த தமிழ் அரசியல்வாதிகளோ, அல்லது புலம்பெயர் அமைப்புக்களோ, முன்னாள்ப் போராளிகளைத் திரும்பிப் பார்க்கவில்லை.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், தங்களை மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு தங்களுக்குச் சொத்துச் சேர்க்கின்றனர்.”என புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றையதினம் (06.09) வெள்ளிக்கிழமை, மாலை 4.30 மணியளவில் மன்னார், உப்புக்குளம் பகுதியில், “தமிழ் விடுதலைப் புலிகள்”கட்சி அலுவலகத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் முப்பது வருட காலமாகப் போராடியவர்கள். யுத்தம் மௌனிக்கப்பட்டு பதினைந்து வருடங்களுக்கு மேலாகியும், மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கிற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினாலேயோ, வேறெந்த தமிழ் அரசியல்வாதிகளினாலோ, பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்கு எந்தத் தொழில் வாய்ப்பும் பெற்றுத்தர முடியவில்லை. எங்களுக்கு எந்தவொரு முன்னேற்றகரமான வேலைத்திட்டத்தையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.
யுத்த காலத்தில், டக்ளஸ், கருணா, பிள்ளையான் போல, மக்களுக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர்களல்ல, நாங்கள்.
புணர்வாழ்வளிக்கப்பட்ட பன்னிரண்டாயிரத்துக்கும் அதிகமான தமிழ் விடுதலைப் புலிகள் சார்பாக 9 பேர் கொண்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு, மற்றும் வேலைவாய்ப்பு,உள்ளிட்ட,ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தோம், அவர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கே வாக்களிக்கவேண்டும் என்றார்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்