இலங்கை வீரர் ஒருவருக்கு எதிராக ஐசிசி குற்றச்சாட்டு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை வீரர் பிரவீன் ஜயவிக்ரம மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக பிரவீன் ஜயவிக்ரம மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) உறுதி செய்துள்ளது.

சர்வதேச போட்டிகள் மற்றும் 2021 லங்கா பிரீமியர் லீக் போட்டிகளின் போது ஆட்ட நிர்ணயம் செய்ய தன்னை அணுகியதை தாமதமின்றி, ஊழல் தடுப்பு பிரிவுக்கு முறைப்பாடு செய்ய ஜயவிக்ரம தவறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க ஜயவிக்ரமவுக்கு ஓகஸ்ட் ஆறாம் திகதி முதல் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

25 வயதான சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம, 15 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடைசியாக 2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி – 20 தொடரில் இலங்கை சார்பில் அவர் விளையாடியிருந்தார்.

Recommended For You

About the Author: admin