தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நாளை வெள்ளிக்கிழமை (09) நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளை நள்ளிரவின் பின்னர் அனுப்பப்படும் எந்தவொரு விண்ணப்பமும் பரிசீலிக்கப்படாது. தபால் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது.
இதனால் விண்ணப்பங்களை வழங்காதவர்கள் உடனடியாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் புதன்கிழமை 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் கால எல்லையும் நிறைவடையும். 15ஆம் திகதி காலை 9 மணிமுதல் பகல் 12 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் பிரச்சினைகளை தீர்க்கும் மையங்கள் மாவட்ட மட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கு பொலிஸார் தமது ஆதரவை வழங்கியுள்ளனர். குறித்த மையங்கள் தொடர்பான தொலைபேசி இலக்கங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
தேர்தல் சட்டம் நடைமுறையில் இருப்பதால் தேர்தல்கள் ஆணைக்குழு பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளை அனைத்து அரச நிறுவனங்களும் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.