இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கை அணி 27 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
1997ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி, இந்திய அணியை தோற்கடித்து ஒருநாள் தொடரை கைபற்றியுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த தொடரில் முதல் போட்டி சமநிலையில் முடிய, அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி அபார வெற்றியை பதிவுசெய்திருந்தது.
துடுப்பாட்ட பலம்வாய்ந்த இந்திய அணி வீரர்களை இலங்கையில் சுழல் பந்து வீச்சாளர்கள் திணறடித்திருந்தனர். இலங்கை அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
என்னதான் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை கண்டிருந்தாலும், அந்த அணியின் வீரர்களில் செயற்பாடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக போட்டி முடிவின் பின்னர் கருத்து வெளியிட்டிருந்த இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா, இலங்கை அணி வீரர்கள் விளையாடிய விதத்தை பாராட்டியிருந்தார்.
தமது அணியின் சிறப்பாக செயற்படவில்லை என்பதை ஒப்புக்கொண்ட அவர், விரைவில் மீண்டு வருவோம் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை, இலங்கை அணியின் வெற்றிக்கு இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சார் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்றிரவு மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்தியுள்ளனர். சனத் ஜயசூரிய மற்றும் அணித் தலைவர் சரித் அசலங்காவுக்கு வாழ்த்துக்களையும்” அவர் கூறியிருந்தார்.
அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விாரட் கோலி, இலங்கை வீரர் குசல் மெண்டிஸூக்கு தனது கையொப்பமிட்ட டீ சர்ட்டை பரிசாக வழங்கியிருந்தார்.
இதேவேளை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இலங்கை தேசியக் கொடியை ஏந்தி, இலங்கை அணியின் வெற்றியை கொண்டாடுவது போன்ற புகைப்படம் ஒன்றும் வைரலாகியுள்ளது.
எனினும், குறித்த படம் 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒன்று என்பதுடன், இலங்கை அணி வெற்றிபெற்ற பின்னர் ரசிகர்கள் அதைன சமூக ஊடகங்களில் வைரலாக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.