அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான ஜோ பைடன் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களமிறங்குகிறார்.
தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து லாஸ் வேகாஸ் பயணத்தை ரத்து செய்த ஜோ பைடன், தான் நன்றாக இருப்பதை கூறும் வகையில் செய்தியாளர்களிடம் வெற்றி செய்கையை காண்பித்து சென்றார்.
சில நாட்களாக சளி தொந்தரவு, இருமலால் ஜோ பைடன் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, டெலாவேரில் உள்ள ரெஹோபோத் வீட்டில் பைடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
முன்னதாக பைடன் அளித்த பேட்டியில், தனக்கு ஏதேனும் அவசர மருத்துவ கோளாறு ஏற்படும் பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பைடன் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அவருக்கான ஆதரவு அமெரிக்காவில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அவர் இலகுவாக வெற்றிபெரும் சூழலும் உதயமாகியுள்ளது.
இதன் காரணமாக மிகவும் வலிமையான வேட்பாளர் ஒருவரை தேர்தலில் களமிறக்க வேண்டிய சூழலுக்கு ஜனநாயக கட்சி தள்ளப்பட்டுள்ளது.