தமிழ் பொது வேட்பாளருக்கே ஆதரவு: சித்தார்த்தன்

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டினை தமிழ் மக்களுக்கு, ஜே.வி.பி அறிவிக்க வேண்டும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வடக்கு, கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு பிரதான பங்காளியாக ஜே.வி.பி கட்சி செயற்பட்ட விடயத்தில், தமிழ் மக்கள் இன்று வரை அதிருப்தியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள சித்தார்த்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் நிறுத்தப்படுகின்ற பொது வேட்பாளருக்கே தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கின்ற ஐந்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு பிரதான பங்காளியாக ஜே.வி.பி கட்சி செயற்பட்ட விடயத்தில், தமிழ் மக்கள் இன்று வரை அதிருப்தியடைந்துள்ளதாகவும், இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி தனது உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் பட்சத்தில், தமிழ் மக்களது மனநிலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் காணப்படும் நிலைமைகள் பற்றி அங்கு கலந்துரையாடப்பட்டதோடு, எதிர்காலத்திலும் தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொள்ள இரு தரப்பிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin