வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம் நீடித்து செல்லும் நிலையில் அதற்கு தீர்வு என்ன என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவிடம் சைவ சமயத் தலைவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த அனுரகுமார, தனது சகோதரியும் காணமலாக்கப்பட்டவர் தான் ஆகவே தனக்கும் அதன் வலி தெரியும் எனவும், தாம் ஆட்சிக்கு வந்து அதற்கொரு தீர்வை காண்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்குச் சென்று சைவ சமயத் தலைவர்களுடன் சந்திப்பில் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார். இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதன் போது, எந்த குற்றமும் செய்யாத பாடசாலை சிறுவர்கள், குழந்தைகள் போரில் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து, யுத்தம் முடிவுக்கு வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நீங்கள் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப் பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியவில்லையே என அனுர குமார திஸாநாயக்கவிடம் சைவ சமயத் தலைவர்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர்.
மேலும், நாட்டில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினையை தீர்க்க ஜே.வி.பி. பங்காற்ற வேண்டும் என சைவ சமயத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, வெடுக்குநாறிமலை உள்ளிட்ட பல இடங்களில் சைவ ஆலயங்கள் அழிக்கப்படும் நிலையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகிறன.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் இந்த நாடு ஒருபோதும் முன்னேறாது என சைவ சமயத் தலைவர்கள் சுட்டிக்காட்டியபோது,
சமயத்தின் பெயரால் சண்டை பிடிக்கக் கூடாது என தெரிவித்த அனுர குமார திஸாநாயக்க, தாம் ஆட்சிக்கு வந்தால் கீரிமலை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள அழிவடைந்த ஆலயங்கள் மீள புனரமைக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.
சந்திப்பில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்து தென்னிலங்கை வேட்பாளர்கள் வடக்கிற்கு வருகின்ற போக்கு அதிகரித்துள்ள நிலையில், இந்த சந்திப்பில் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதையும் வெளிப்படையாக பேசவில்லை என்றும் அறியமுடிகிறது.