பொது வேட்பாளர் நியமிப்பதற்கு ரெலோ பூரண ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள கட்சியின் செயலாளரும் நா.உறுப்பினருமான கோ.கருணாகரன் காரியாலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) ஊடக மாநடு இடம்பெற்றது.

இதன்போது,கட்சியின் தலைவர் நா.உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், உப தலைவர் ஹென்ரி மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த தீர்மானத்தை வெளியிட்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றிய விரிவான கலந்துரையாடல் இதன்போது நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கருத்து தெரிவித்த சுரேன் குருசாமி

“கடந்த கால எமது அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு எழுந்துள்ள சூழ்நிலையிலும் காலத்தின் தேவை மற்றும் சூழ்நிலைகளை கருத்திற் கொண்டும் பொது வேட்பாளர் என்ற கோரிக்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எமது கட்சியின் தலைமை குழு எடுத்திருக்கிறது.

இந்தக் கோரிக்கையானது வெற்றியளிப்பதற்கு தமிழ் தேசிய தரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை முன் நிறுத்த வேண்டிய அவசியத்தையும் நாம் வலியுறுத்துகிறோம்.

அதேவேளை அனைத்து தமிழ் தரப்பினர்களையும் ஒருங்கிணைக்கும் தற்போதைய முயற்சிக்கு நமது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin