பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் கஹவத்த ஓபாத்த தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தோட்டத் தொழிலாளி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றர்.
இவர்கள் மூவரும் குறித்த தோட்டத்தில் தேயிலைச் செடிகளுக்கு உரம் இட்டுக் கொண்டிருந்த நிலையில் நேற்று (28) பகல் வீசிய கடும் காற்று காரணமாக திடீரென மரம் முறிந்து விழுந்துள்ளது.
முறிந்து விழுந்த மரத்தின் அடியில் சிக்கியிருந்த மூவரையும் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் மீட்ட நிலையில் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கடினமான ஒரு பிரதேசத்தில் இவர்கள் மூவரும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபாத்த தோட்டத்தில் இருந்து வைத்தியசாலைக்கு செல்லும் பாதை பயணிக்க முடியாத நிலையில் மிகவும் சேதமடைந்து இருப்பதால் இவ்வாறு விபத்துக்குள்ளானவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல சுமார் ஒரு மணி நேரம் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த விபத்தால் உயிரிழந்தவர் 46 வயதுடைய தமிழ்ச்செல்வி என்பவராவார். உயிரிழந்தவரின் கணவர் சமீபத்தில் நோய் நிலமை காரணமாக உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த இரு பெண்களும் கஹவத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுள் ஒருவரின் நிலை மோசமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், இரத்தினபுரி தோட்டங்களை அண்மித்த பகுதிகளில் காணப்படும் மரங்கள் தற்போது அபாய நிலையில் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்றுமாறு அதிகாரிகளிடம் இதற்கு முன்னர் கோரிக்கை முன்வைத்த போதும் அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் அனர்த்தங்கள்,விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இது வரையில் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் பல மரமுறிந்து விழுந்ததால் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.