பாகிஸ்தான் பலுசிஸ்தானில் பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (29) இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு பலுசிஸ்தானில் உள்ள டர்பத் நகரிலிருந்து வடக்கே சுமார் 750 கிமீ (466 மைல்) தொலைவில் உள்ள குவெட்டா மாகாண தலைநகர் நோக்கிச் சென்ற பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்தில் மொத்தம் 54 பயணிகள் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
“இந்த இக்கட்டான நேரத்தில் உயிரிழந்த குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம், அவர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.