கொழும்பில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பம்பலப்பிட்டி பகுதியில் பாரிய மின் விளம்பரப்பலகை ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், அங்குள்ள சில கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பத்து மாவட்டங்களில் 33,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இரத்தினபுரி, கொழும்பு, கேகாலை, அனுராதபுரம், கண்டி, காலி, யாழ்ப்பாணம், களுத்துறை, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 1,827 பேர் பதினொரு தற்காலிக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான நிவாரணத் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.