நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் (19) என கூறப்பட்ட நிலையில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாம் 14 ஆம் திகதி பிரதமர் மோடியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தக் கப்பல் சேவை நாளாந்தம் இடம்பெறும் என கூறப்பட்ட நிலையில் சீரற்ற வானிலை மற்றும் போதியளவான பயணிகள் இன்மையால் போக்குவரத்து தடைப்பட்டது.
‘சிவகங்கை’ கப்பல் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டு மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்ததையடுத்து நாகை செல்லும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்பின்னர் கப்பல் கடந்த 11 ஆம் திகதி காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டதையடுத்து கடந்த 13ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கப்பல், நாகைக்கு செல்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை (17) முதல் பயணிகள் கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே காரணத்தால் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பயணிகள் கப்பல் சேவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை விமான போக்குவரத்துத் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை மாற்றியமைக்க முடியும் எனவும் கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.