மருந்துகளின் தரத்தை குறைந்தபட்ச வழியில் பரிசீலித்து அல்லது பரிசீலிக்காது இந்நாட்டுக்கு வரவழைத்து நோயாளர்களை அபாய நிலைக்குத் தள்ளிய தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் அப்போது இருந்த தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அவற்றை அனுமதித்த நிர்வாகக்குழு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய கணக்காய்வு அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
சுகாதாரத்துக்கு பொருத்தமற்ற மருந்துகளை விநியோகித்த விநியோகஸ்தர்களுக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கணக்காய்வு அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
தரமற்ற மருந்துகளை விநியோகித்த நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் நிதி அமைச்சுக்கு, கணக்காய்வு அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
2199 கோடி ரூபாய்க்கு அதிக பெறுமதியான அவசர கொள்முதல்கள் மற்றும் சுமார் 2 கோடி அமெரிக்க டொலர்களுக்கு அதிக பெறுமதியான கொள்முதல்கள் தொடர்பில் ஒப்புதல்களை கடந்த மாரச் மாதம் 31ஆம் திகதி வரை பெற்றுக்ககொள்ளவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கொள்முதல்கள் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் பெறப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அவசர கொள்முதல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையிலேயே இந்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் தொடர்பில் அறிக்கை
நிதி அமைச்சின் செயலாளரின் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் திகதி கடிதத்தின் அடிப்படையில், சுகாதார அமைச்சின் அவசர கொள்முதல் நடவடிக்கையின் கீழ் நடத்தப்படும் கொள்முதல் மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட பொருட்கள் தொடர்பிலான அறிக்கையொன்றை சுகாதார அமைச்சர், அமைச்சின் அனுமதிக்கு முன்வைக்க வேண்டும்.
இந்நிலையில், அவசர கொள்முதல்கள் மற்றும் மருந்து உற்பத்தி, விநியோகம் போன்றவை ஒழுங்குமுறை பிரிவால் பரிசீலிக்கப்படவில்லை என கணக்காய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு அவசர கொள்முதல்களை மேற்கொள்வதன் மூலம் அரசாங்கத்துக்கு ஏற்படும் நட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நட்டம்
இந்நிலையில், இமினோகுளோபின் மருந்துகள் நூற்றுக்கு 254 வீதமான அதிக விலைக்கு அவசர கொள்முதல் செய்யப்பட்டுள்ளதுடன் அதனால் அரசாங்கத்துக்கு சுமார் 6 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்மூலம், தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற மருந்தை நாட்டிற்கு கொண்டுவர ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரை 248 வகையான மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், 173 வகையான மருந்துகள் பாவனையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஏற்பட்ட நட்டங்களுக்கு குறித்த அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டும் என கணக்காய்வு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், நாட்டில் 448 தடைவைகள் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.