இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் பேரழிவுகள் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் நடைபெறவில்லை. ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் கூறினார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார்.
நினைவுகூரும் நிகழ்வு
2009 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது இடம்பெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று சனிக்கிழமை பகல் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உணர்வுபுர்வமாக இடம்பெற்றது.
தமிழினப் படுகொலை எனக் கூறப்படும் 15 ஆவது வருட நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெற்றது. பெருமளவு மக்கள் இதில் கலந்துகொண்டு உயிர்நீத்த தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தினர். பலர் கண்ணீர் சிந்தி அழுதனர்.
இன்று காலை 07.00 மணி முதல் பகல் 09.30 வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளன.
அதேநேரம் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 க்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டது. பொதுமக்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் உறுப்பினர்களும் மற்றும் சமயத் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் நினைவேந்தல் நிகழ்வில் பங்குபற்றினர்.
யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் பங்குகொண்டதுடன் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இந்த நிகழ்வு வெளியிப்படுத்தியிருந்ததாக அங்குள்ள எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.